Tamil Matrimony Blog - Multi Matrimony

மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்ய வேண்டும்? (Bridal Makeup Tips)

Facebooktwitterredditpinterestlinkedinmailby feather

கல்யாணம் என்பது ஆயிரங்காலத்து பயிர்என்று சொல்வார்கள். அதனால்தான் அந்த நாளை மங்களகரமாக கொண்டாடுகிறார்கள். திருமண வீட்டிற்கு சென்றால் அனைவருடைய கண்களும் மணமகளின் அழகையே மொய்க்கும். மணப்பெண்ணுக்கு அலங்காரம் செய்வது என்பது மிக முக்கியமானது. சரி மணப்பெண்ணுக்கு என்னென்ன அலங்காரம் செய்வது என்று பார்ப்போமா…

 

Tamil Bride

திருமணத்திற்கு முன்…

  1. அழகாகவும், மிடுக்காகவும் தோன்ற எளிமையான உடற்பயிற்சிகளை செய்து வரவேண்டும். நடப்பது கூட சிறந்த உடற்பயிற்சிதான். தினமும், காலை மாலை அரைமணிநேரம் நடந்து செல்லுங்கள். இது ரத்த ஓட்டத்தை சீராக்குவதுடன், உடல் எடையையும் குறைக்கிறது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது அதிகம் களைப்பு ஏற்படாது.
  2. உடற்பயிற்சி செய்த பின் அதிகமாக பசி ஏற்படும். அதற்காக நிறைய சாப்பிட்டு விடாதீர்கள். தினமும் அளவுடன் சாப்பிடுங்கள். தினமும் 2 பழங்களாவது சாப்பிடுங்கள். பப்பாளி பழத்தை சிறு துண்டுகளாக நறுக்கி சாப்பிடலாம். அதன் மீது மிளகுப் பொடி தூவினால் பசி அடங்குவதுடன் சருமமும் பளபளப்பாக மாறும்.
  3. முகத்திற்கு தரமான ப்ளீச்சிங், ப்ரூட் பேஷியல் செய்துகொள்ளலாம். கை, கால்களுக்கு மெனிக்யூர் மற்றும் பெடிக்யூர் செய்து வந்தால் திருமண சமயத்தில் அழகு கூடும்.
  4. திருமணத்திற்கு ஒருமாதத்திற்கு முன்பு கோல்டன் பேஷியல், தலைமுடி பராமரிப்பு ஆகியவற்றை செய்யலாம். முகப்பரு உள்ளவர்கள் இரண்டு வாரத்திற்கு முன்பே அழகுக் கலை நிபுணரிடம் சென்று சரிசெய்துகொள்ளுங்கள்.
  5. தலைமுடியை உறுதியாக சுத்தமாக வைக்க சூடான எண்ணையை தேய்த்து மசாஜ் செய்துகொள்ளுங்கள். நல்ல தூக்கம் அவசியம். தினமும் 8 மணிநேரம் தூங்குங்கள். தூக்கமும் அழகைக் கூட்டும்.
  6. கண்ணுக்கு கீழ் கருவளையங்கள் தோன்றினால், முட்டையின் வெள்ளைக்கருவை எடுத்து அந்த இடத்தில் தேய்த்து, உலர்ந்ததும் கஞ்சி தண்ணீ­ர் கொண்டு கழுவி விடுங்கள்.
  7. இரவில் தூங்குவதற்கு முன்பு, டீ டிகாஷனில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்துக்கொள்ளுங்கள். கண்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.
  8. நலங்கு மாவுடன் மஞ்சள் தூளையும் சேர்த்து கை, கால்களில் தடவினால் கரும்புள்ளிகள் மறையும்.
  9. திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் கை, கால்களில் மருதாணி போட்டுக்கொள்ளலாம். ராஜஸ்தானி மெகந்தி, கறுப்பு மெகந்தி, அராபிக் மெகந்தி என்று பலவகையான டிசைன்கள் உள்ளன.
  10. மூன்று நாட்களுக்கு முன்பே புருவத்தை ட்ரிம் செய்துகொள்ளுங்கள்.

மேக் அப் போடுவது எப்படி?

  1. மாலையில் நடைபெறும் ரிசப்ஷனுக்கு சற்று அதிகமாகவும், காலையில் மிதமாகவும் மேப் அப் போட்டுக்கொள்ளுங்கள். திருமண நாளன்று அதிகமாக வியர்த்துக் கொட்டும். அதனால், கிரீம் பேஸ் மேக் அப்பை விட, பவுடர் மேக் அப் போடுவது நல்லது. மேக் அப் போடுவதற்கு முன் ஐஸ்கட்டிகளைக் கொண்டு முகத்திற்கு ஒத்தடம் கொடுங்கள்.
  2. அவரவர் நிறத்திற்கேற்ப பவுண்டேஷன், பவுடர், லிப்ஸ்டிக் போட வேண்டும்.
  3. கண்களைச் சுற்றி ஐ-லைனர் வரையும் போது கலைநயத்துடன் வரைய வேண்டும். நிறத்திற்கேற்ப ‘ஐ-ஷேடோ’வைத் தேர்ந்தெடுங்கள்.
  4. மேக்அப் போடும்போது கழுத்து, கைகள் வரை ஒரே சீராக போடப்பட்டுள்ளதா என்று கவனிக்க வேண்டும்.
  5. கன்னத்திற்கு போடப்படும் ‘ரூஜ்’ தனியாக சிவப்பாக தெரியாமல் முகத்தோடு ஒன்றிப் போக வேண்டும். இதைச் சரியாக செய்தால் பள்ளமாக உள்ள கன்னங்களைக் கூட சரிசெய்திட முடியும்.
  6. மெரூன் அல்லது பிரவுன் நிறத்தில் பொட்டு வைத்தால் போட்டோவில் பளிச் சென்று தெரிவீர்கள். மேலும் அழகூட்ட…பொட்டைச் சுற்றி கற்களால் டிசைன்கள் செய்து கொள்ளுங்கள்.
  7. மேக் அப் செய்யும் போது முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், தோலில் உள்ள சுருக்கங்கள் மறைந்து விட வேண்டும். நல்ல தரமான மேக் அப் பொருட்களையே பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், திருமண நேரத்தில் தோலில் அலர்ஜி ஏற்படும்.

சிகையலங்காரம்

மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம். முன்புறம் முகத்தின் மேற்புறம் சிகையலங்காரம் செய்வதற்கு ‘ப்ரண்ட் செட்’ என்று பெயர். இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும். பின்னல் போட்டு ஜடை அலங்காரம் செய்து, பின்னலில் பூ வைப்பதற்கு பதில் ஜரிகை, முத்து, கற்களால் செய்யப்பட்ட மோடி பைப்கள், பைப்பின்னல், ஐந்துகால் பின்னல், மேலே கொண்டை கீழே பின்னல் போடுவது என்று பல வகைகள் உள்ளன.

கொண்டை போடும்போது மணப்பெண்ணின் உயரம், பருமன், கழுத்தின் உயரம் போன்றவற்றைக் கணக்கிட வேண்டும். குட்டையான பெண்களுக்கு சற்று தூக்கியவாறு கொண்டையும், நீளமான கழுத்துள்ளவர்களுக்கு கழுத்தை மறைக்கும் அளவில் கொண்டையை இறக்கியும் போட வேண்டும். முகம் நீளமாக உள்ளவர்களுக்கு காதுகளை மறைக்கும் விதத்தில் சிறிது முடியை எடுத்து சுருட்டி விடலாம். அகலமான முகத்தை உடையவர்கள் முடியைத் தூக்கிக் கட்ட வேண்டும். நடுவகிடு எடுத்து அதில் நெற்றிச்சுட்டியை அணியலாம். அல்லது காதின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு முடியை வாரி எடுத்துச் சென்று பின்குத்தி விட்டு, பின்னால் அழகாக கொண்டை போடலாம்.

திருமணப் புடவை

திருமணப் புடவை வாங்கும்போது, அவை குறைந்தது 2 ஆண்டுகளாவது அணிய வேண்டியிருப்பதால், தரமான புடவையாக பார்த்து வாங்குங்கள். அவை நீங்கள் அணியும் நகைகளுக்கு பொருத்தமாக இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். உதாரணமாக, அரக்கு நிற ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை கறுப்பாக சற்று குண்டான பெண்களுக்கு பொருத்தமாக இருக்காது. சிவந்த மேனியுடைய பெண்களுக்கு மிளகாய் பழ சிவப்பில் மெல்லிய ஜரிகை பார்டர் போட்ட பட்டுப்புடவை எடுப்பாக இருக்கும்.

போட்டோவில் பளிச்சென்று தெரியக்கூடிய வகையில் உடைகளைத் தேர்வு செய்யுங்கள். வாடாமல்லி, மயில் கழுத்து நிறம், தேன் நிறம் போன்ற வண்ணங்கள் ரிசப்ஷனுக்கு ஏற்றவை. பட்டு சேலைக்கு ‘ரா’ சில்க், பருத்தி வகையில் உள்ள சோளிகள் அணியலாம். மார்டனை விரும்புபவர்கள் தங்களுக்கு பொருத்தமான காக்ரா சோளி அணியலாம்.

Nov 26, 2014
by
Categories :Tips, Tips for Marriage Life, Wedding Tips
  • Subscribe Us

  • RSS Daily Horoscope

  • CATEGORIES

  • Tags